"எதுக்கு பயப்படணும் ?"

சிறுவயதில் உறங்குவதற்கு முன் சிறிது நேரம் பாட்டியுடன் ஏதாவது கதை பேசிவிட்டு (அல்லது கேட்டுவிட்டு) உறங்குவது வழக்கம். சில விஷயங்களை தாய் தந்தையுடன் பகிர்ந்து கொள்வதை விட பாட்டியுடன் பகிர்வதில் ஒருவித மகிழ்ச்சி. பள்ளியில் மறுநாள் ஏதாவது போட்டி அல்லது பரீட்சை என்றால் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது இயல்பு தானே. அப்படிப்பட்ட தருணங்களில் "பாட்டி, நாளைக்கு ஸ்கூல்ல டெஸ்ட் இருக்கு. பயம்மா இருக்கு." என்று கூறினால் தவறாமல் வரும் பதில், "எதுக்கு பயப்படணும் ? நீ ஏமாத்தல, பொய் சொல்லல, திருடல. இது எதுவும் பண்ணாதவன் எதுக்கும் பயப்பட வேண்டாம்."

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அனாயாசமாக சொல்லிவிட்டாள்! வாழ்க்கையில் சில மலைக்க வைக்கும் தருணங்களிலும், பெரிய நெருக்கடி தரும் தொல்லைகள் வந்த போதிலும், பயம் என்ற ஒன்று சற்று எட்டி பார்க்கும் நேரத்தில் எல்லாம், ஒரு மந்திரம் போல தைரியம் கொடுத்த வார்த்தைகள் அவை. 

சிறுவயது முதல் பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும், அவைகளைத்தாண்டி எப்பொழுதும் தனக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு  ஆக்கபூர்வமான சூழ்நிலையை உருவாக்கிக்  கொள்வதில் கெட்டிகாரி.  குழந்தை முதல் முதியவர் வரை எல்லோரிடமும் சகஜமாக பழகும் குணம். யாருக்கும் தீங்கு நினைக்காத, அதே நேரம் தனது தேவைகளை அழகாக எடுத்துச்சொல்லி காரியம் சாதித்து கொள்ளும் லாவகம். அவளுக்கு கீதையும் தெரியும் கிரிக்கெட் ஸ்கோரும் தெரியும்! 

தன் பேரன் சுயமாக பிசினஸ் செய்கிறான் என்பதில் அவ்வளவு பெருமை. எனது consulting business என்னவென்று முழுவதும் புரியாத போதும் ("சம்பளம் கிடையாதா, வெறும் fees தானா?"), ஒருமுறை அதை பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து கடைசியில் "வருமானம் வருதா, அவ்வளவுதான் வேணும்." என்று சொல்லி திருப்தி பட்டுகொண்டாள்! 

90 வயது வரை ஏதாவது கற்றுக்கொண்டே இருந்த lifelong learner. பிறந்த குழந்தை முதல் வளர்ந்த மகன்கள் வரை பல பிரியமானவர்களை இழந்தபோதிலும் moving on என்பதன் எடுத்துக்காட்டாக எப்பொழுதும் இருந்தவள் எங்கள் ஜானகி பாட்டி. 

கடந்த சில வருடங்களாகவே, "நான் உடம்புக்கு வியாதி வந்து போனா எனக்கும் கஷ்டம், உங்க எல்லாருக்கும் கஷ்டம்." என்று கூறிக்கொண்டே தினமும் இறைவனிடம் தனக்கு ஒரு நல்ல முடிவை கேட்டுக்கொண்டே இருந்தாள். ஏமாற்றாமல், பொய் சொல்லாமல், திருடாமல் எந்த பயமும் இன்றி இறப்பையும் துணிந்து எதிர்கொள்ளத் தன்னை தினமும் தயார்படுத்தி கொண்டு, அவள் விருப்பப்படியே நொடிப்பொழுதில் இந்த உலகத்தை விட்டு மிக அனாயாசமாகச் சென்றுவிட்டாள். 

She got exactly what she wanted, but we who survive her will always miss her. 

பின்குறிப்பு: பள்ளியில் ஒருபோதும் தமிழ் கற்காத, குழந்தைப்பருவம் எல்லாம் வேறு மாநிலத்தில் கழித்த நான், இன்று தமிழில் எழுதுவதற்கு காரணமும் என் பாட்டிதான்.

Comments

T V Ashok said…
Really true. Janaki mami lived a turbulent life. But she with stood all the tragic events and bravely faced everything and brought up ,all her children in an astonishing style. My mother lost a good friend 😭
We lost a great motivator and a good human.
Gopalakrisnan janaki niwas yhindikulam said…
Great human being, always with a smiling face, enquires about everyone whenever we visited our hometown Palakkad, where she was our neighbour. Pranams and prayers to the noble soul🙏

Popular posts from this blog

சென்னையில் ஒரு மழைக்காலம் (Monsoon in Chennai)

A generation that dared to dream