மூன்றெழுத்தும் நம் மூச்சும்  

கொரோனா 
இந்த மூன்றெழுத்துதான் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்து, மூச்ச்சுத்திணற வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்றாலும் அடுத்த தெரு அத்தை வீடாக இருந்தாலும் யாரும் யாரையும் நேரில் சென்று சந்திக்க முடியாத ஒரு வினோத நிலை. எது வேண்டும் என்றாலும் மொபைல் போன் அல்லது லேப்டாப் தான் கதி. இந்த அழகான முப்பரிமாண வாழ்க்கையை இரு பரிமாணத்தில் மட்டும் வாழும் அவலம்.  
குழந்தைகளின் பள்ளிக்கூடமும் பெற்றோர்களின் அலுவலகங்களும் அடுத்தடுத்த அறைகளில் ஜம்மென்று நடக்கின்றன. இந்த அளவுக்கு எல்லாமே கணினிமயம் ஆகிவிட்டது ஒரு சாதனைதான் என்றாலும், அதில் சில ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஓடி விளையாட முடியாத பாப்பாக்களும் ஓய்ந்தே இருக்கும் பெரியவர்களும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அங்கமாக இருக்கமுடியாது.  

அலுவலகம் என்பது ஒரு தனி இடமாக இருப்பது சில எல்லைகளை வளர்க்க உதவும். 'வீட்டு விஷயங்கள் வீட்டில், அலுவலக வேலைகள் வெளியே' என்ற நிலை, பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கு ஆசைஆசையாய் லேப்டாப் ஏற்பாடு செய்து குடுக்கும்போதே தேயத் துவங்கின. இப்பொழுது கட்டாய Work from Home (WFH) என்ற நிலையில் எந்த ஒரு வரைமுறையும் இன்றி நம் நேரம் மற்றும் எண்ணம் முழுவதும் Office Work என்று ஆகிவிட்டது.  
"24/7 வேலை தானா, யாரு கிட்ட டபாய்க்கற" என்று கேட்பவர்களுக்கு; யாரும் விழித்திருக்கும் நேரம் முழுவதும் ஆபீஸ் வேலை செய்வது இல்லை. ஆனால், social animal என்று கூறப்படும் மனிதனை, நான்கு சுவற்றுக்குள் அடைத்து, சரியும் பொருளாதாரம் தன்னை மட்டும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் கண்ணாக இருக்கும் நிறுவனங்கள், "வீட்ல தானே இருக்கீங்க, கொஞ்சம் இதமட்டும் முடிச்சு குடுத்துடுங்க." என்று நைச்சியமாக பேசி வேலை சாதித்துக்கொண்டு விடுகின்றன. நன்றாகப் பணிசெய்பவர்களுக்கு மேலும் புதிய பணிகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படுகின்றன. இதனால் வேலை செய்யாத நேரங்கள் வேலைப்பளுவின் தாக்கம் மறக்க ஓய்வு எடுப்பதில் செல்கிறது. அதையும்மீறி இருக்கும் கொஞ்சநஞ்ச நேரம் கைகழுவுவதிலும் Home Delivery செய்யப்பட்ட சாமான்களைத் துடைப்பதிலும் போய்விடுகிறது.
இந்த சுழற்சியில் இருந்து மீள்வது கடினம்தான். ஆனால் ஒரு விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால் மனதும் உடலும் பாதிக்கும் வாய்ப்புகள் இக்காலகட்டத்தில் மிக அதிகம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆபீஸ் சென்று வரும் நேரம் மிச்சம் ஆகும் பட்சத்தில் அதை தூக்கத்திலும் சோம்பலிலும் வீணாக்காமல் உபயோகமாகப் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.  

உங்களுக்குப் பிடித்தமான காரியங்களை நேரம் ஒதுக்கிச் செய்யுங்கள். தினம் ஒரு நண்பரிடமும் ஒரு உறவினரிடமும் பேசுங்கள். வீட்டு வேலைகளைப் பங்கிட்டு குழந்தைகளுக்கும் பழக்குங்கள். பழைய புத்தகங்களைப் புரட்டுங்கள், பல புதிய விஷயங்களை அறிவீர்கள். சிறிதாவது நடைப்பயிற்சி/உடற்பயிற்சி அவசியம் செய்யுங்கள்.
அலுவலகத்தில் "இல்லை" என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும் தானே தவிர வாழ்க்கையே தொழில் அல்ல. முக்கியமாகக், கையில் கடிகாரம் கட்டுங்கள். நாம் நேரம் பார்க்க மொபைல் எடுக்கும்பொது அதில் அவசியமே இல்லாத ஏதாவது ஒன்றைப் பார்த்து போனில் உலவ ஆரம்பித்து விடுகிறோம். இது நமது நேரத்தையும் செயல்திறனையும் மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம்.
பல சிறு மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவல்லது. நல்ல மாற்றங்களைத் துவங்க இன்றுபோல் ஒரு நன்னாள் ஏது ?
இதுவும் இன்னும் பலதும், விரைவில்... 

Comments

Popular posts from this blog

"எதுக்கு பயப்படணும் ?"

சென்னையில் ஒரு மழைக்காலம் (Monsoon in Chennai)

A generation that dared to dream